திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 : போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! மற்றும் திருப்பாவை பாடல் 21: ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி பாடல்களைப் பார்ப்போம்.

மார்கழி 21.போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! மற்றும் திருப்பாவை பாடல் 21: ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி பாடல்களைப் பார்ப்போம்.

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி பாடல் - 1

மார்கழி 21. "போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே!" என்கின்ற‌ திருவெம்பாவையின் மற்றும் "ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி" என்கின்ற‌ திருப்பாவை 21ஆம் பாடல்களைப் பார்ப்போம்.

திருப்பாவை பாடல்கள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். மார்கழி மாதத்தில், இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் சேர்த்து பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் - 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

விளக்கம்:
சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!

திருப்பாவை பாடல் - 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment