மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு (திருநீற்றுப்பதிகம்)

வெளியிட்ட தேதி : 11.01.2020

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு (திருநீற்றுப்பதிகம்) பிரதோஷ பூஜை பாடல் வரிகள் - Thiruneetru Pathigam Manthiramavathu Neeru - Pradosham Sivan Song Tamil Lyrics

திருஞானசம்பந்தர் அருளிய‌ இரண்டாம் திருமுறை திருநீற்றுப்பதிகம்

 1. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
  சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
  தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
  செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
 2. வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
  போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
  ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
  சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
 3. முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
  சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
  பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
  சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
 4. காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
  பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
  மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
  சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
 5. பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
  பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
  ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
  தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
 6. அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
  வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
  பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
  திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
 7. எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
  பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
  துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
  அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.
 8. இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
  பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
  தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
  அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.
 9. மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
  மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
  ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
  ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.
 10. குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
  கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
  எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
  அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.
 11. ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
  போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
  தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
  சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
 12. ---------------- திருச்சிற்றம்பலம் -------------

பாடல் விளக்கம்

பண் :காந்தாரம்
பாடல் எண் : 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

குறிப்புரை :
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். வானவர் - சிவலோகத்திலுள்ளவர். சிவமானவர். மேலது - திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம் - அழகு; சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம் - ஆகமம். சிவாகமத்தில் சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவசமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது. உள்ளது - சிவம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்` - ( திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன் - பாகன். திரு ஆலவாயான் - மதுரைத்தலத்தில் திருவாலவாய்க்கோயிலுள் எழுந்தருளியிருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை ... பூசி மகிழ்வாரே யாமாகில் ... சாரும் சிவகதி ...` (திருமந்திரம்)

பண் :காந்தாரம்
பாடல் எண் : 2

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

குறிப்புரை :
திருநீறு வேதத்தில் சிறக்க எடுத்தோதப் பெற்றது. கொடிய பிறவித்துயரம் முதலியவற்றைத் தீர்ப்பது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலிய புன்மைகளை நீக்குவது. ஆசிரியர் மாணாக்கர்க்கு ஓதத்தகும் அளவு பெருமை உடையது. ஓதும்போது அணியத் தகுதியுடையது. உண்மையில் நிலைபெற்றிருப்பது. உண்மை - மெய்ப்பொருளுமாம். சீதம் - குளிர்ச்சி. புனல் - நீர்.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 3

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

குறிப்புரை :
வீட்டை அளிப்பது; எல்லாச் செல்வங்களையும் வெறுத்தவர் முனிவர். முனிவு - வெறுப்பு; கோபம். முனிவர் (முநிவர்) - மனனசீலர் எனலுமாம். அணிவது - அழகு செய்வது, பூண்பதுமாம். சத்திய - எப்பொழுதும் உள்ளது. தக்கோர் - சிவனடியார். பத்தி - திருவடிக்கன்பு. பரவ - வாழ்த்த. சித்தி - எண்வகைச் சித்தி. அணிமா முதலியன.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 4

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

குறிப்புரை :
பால் வெண்ணீறாய், தன்னை அணிந்தோரைப் பிறர் கண்ணுக்கு அழகராயளித்துக் கருத்திற்கு இனிமை விளைப்பது. கவினைத் தருவது - அணிவோர்க்குச் சிவப்பொலிவு தருவது. பேணி - விரும்பி. பெருமை - திருவருட்சிறப்பு. மாணம் - இறப்பு. நீள் என்னும் பகுதி அம் என்னும் விகுதியோடு சேர்ந்து நீளம் என்று ஆகின்றது. நிகள் என்பதன் முதல் நீட்சியே நீள் என்பது. துகள் தூள் என்பது போல. அதுபோல; மாள் + அம். மாளம். ளகரம் ணகரமாதல் இயல்பு; `நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான்` (தி .1 ப .1 பா .9) என்பதில் னகரம் ணகரமானதைக் காண்க. பெள் - பெண். எள் - எண். தகைவது - தடுப்பது. மதி - இயல்பான அறிவு. `மதிநுட்பம் நூலோடு உடையார்` (திருக்குறள் 636). சேணம் - உயர்வு. பாசத்தார்க்குத் தூரத்ததாகிய வீடுமாம்.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 5

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

குறிப்புரை :
பூசப்பூச இனிமையாக்குவது, சிவபுண்ணியத்தை வளர்ப்பது. பெருமையைப் பேசப் பேச இனிமை உண்டாக்குவது. பெரிய தவத்தோரெல்லார்க்கும் பற்றொழிப்பது. முடிவான பேரின்பநிலையைத் தருவது. அந்தம் - அழகுமாம். தேசங்களெல்லாம் புகழப் பெறுவது.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 6

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.

குறிப்புரை :
செல்வமாவது துன்பம் போக்குவது, வருத்தம் ஒழிப்பது. வானம் - துறக்கம்; சிவலோகம். அளிப்பது - கொடுப்பது. சிறப்பாகச் சைவ சமயத்தார்க்கும் பொதுவாக எல்லாச் சமயத்தார்க்கும் பொருத்தமாயிருப்பது திருநீறு. சிவபுண்ணியத்தை உடையவரும் பசு புண்ணியத்தை உடையவரும் ஆகிய சைவர் பூசுகின்ற வெண்ணீறு. திருத்தகு மாளிகை - அழகு தக்க மாளிகைகள்.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 7

எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.

குறிப்புரை :
எயில் - திரிபுரம். அட்டது - எரித்தது. அது என்பது பகுதிப்பொருள் விகுதி. இருமை - இம்மை மறுமை. பயிலப்படுவது - திருநீற்றை அணிந்து அணிந்து பழகினாலன்றி அதன் பயனை எய்துவதரிது. பாக்கியம் - செல்வம், அருள். துயிலை - கேவலத்தையும் சகலத்தையும். சுத்தமதாவது - சுத்தாவத்தையாய் விளங்குவது. அயில் - கூர்மை. பொலிதரு - விளக்கம் செய்கின்ற.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 8

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

குறிப்புரை :
இராவணன் மேலது - திரிலோக சஞ்சாரியாகிய இராவணன் தனக்கு வாய்த்த செல்வப்பெருக்கத்தை மதித்துத் திருநீற்றையவமதிக்காமல் அணிந்து சிவபிரானருளைப் பெற்றான் என்னும் உண்மை எல்லா நன்மக்களாலும் எண்ணத்தக்கது. திருநீறே வீடு பேறளிக்கும் என்னும் உண்மை எண்ணத்தக்கது. பராவண்ணம் ஆவது - பராசக்தி சொரூபமானது. அதனால் உயிர்களின் பாவம் போக்குவதாகின்றது. தராவண்ணம் - தத்துவம்; மெய்ப்பொருள். அரா - பாம்பு. வணங்கும் - வளையும்; தாழும். அணங்கும் எனின் அழகுசெய்யும் என்க.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 9

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.

குறிப்புரை :
மேல் - விண்ணுலகம். உறை - வாழ்கின்ற தேவர்கள். தங்கள் மெய்யது - தேவர்களுடைய உடம்பிற் பூசப்பட்டது. பொடி - நீறு. ஒரு பொருட் பல்பெயர். உடம்பு இடர் ஏலத்தீர்க்கும் இன்பம் - உடம்பெடுக்கும் துன்பத்தைப் பொருந்தப் போக்கும் இன்பம். உடம்பிலுள்ள இடருமாம். ஆலமது - நஞ்சு. மிடறு - திருக்கழுத்து.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

குறிப்புரை :
குண்டிகை - கமண்டலத்தை ஏந்திய. கையர்கள் - கீழ் மக்கள். கண் திகைப்பிப்பது - கண் திகைக்கச்செய்வது. கருத - தியானிக்க. எண் திசைப்பட்ட பொருளார் - எட்டுத்திசையிலும் பொருந்திய சிவமாகிய மெய்ப்பொருளை அடைந்தவரும், விரும்பினவரும், வழிபடுபவருமாகிய சைவர். அவர் ஏத்தும் தன்மையுடையது. அண்டத்தவர் - மேலுலகத்தவர்.

பண் :காந்தாரம்
பாடல் எண் : 11

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

பொழிப்புரை :
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

குறிப்புரை :
ஆற்றல் - வலிமை. அடல் - கொலை. இரண்டும் உடையது விடை. ஆலவாயான் திருநீற்றைப் போற்றி - முதற் பத்துப் பாக்களால் திருவாலவாய்ச் சிவனுடைய திருநீற்றைத் துதித்து. புகலி - சீகாழி. பூசுரன் - பூமியிலுள்ள தேவர். தேற்றி - சைவத்தின் மாண்பைத் தெரிவித்து. தென்னன் - கூன்பாண்டியன். தீ பிணி - தீமையை விளைவிக்கும் நோய்கள். வல்லவர் எழுவாய்; நல்லவர் பயனிலை.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.