மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது.
மண்டல கால பூஜையை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 31-ந்தேதி முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
எருமேலி: பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. எருமேலி கோழிக்கடவில் இருந்து காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் பகல் 12மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மகரவிளக்கு பூஜை
மகரவிளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12 ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதியன்று நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது, 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மண்டல பூஜை காலத்தில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 85 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்து : comment