ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியாா் திருமொழி
நாச்சியார் திருமொழி பொருள்
Nachiyar Thirumozhi paasurangal Meaning | நாச்சியார் திருமொழி பாசுரங்கள் மற்றும் பொருள்
நாச்சியாா் திருமொழி பாடல் 01
மாப்பிள்ளை அழைப்பு
ஒன்றாம் பாடல் : மாப்பிள்ளை அழைப்பு
வாரணமாயிரம் சூழவலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்.
"சிறந்த கல்யாணக் குணங்களை உடையவனான நாராயணன் ஆயிரக்கணக்கான யானைகள் தொடர்ந்து வர மாப்பிள்ளை ஊர்வலம் வந்தாராம். அவரைப் பார்ப்பதற்கும் ஸேவிப்பதற்கும் பூரணப் பொற்கலசங்கள் வைத்து, வாயிற்புறமெங்கும் தங்கத்தினாலான தோரணங்கள் கட்டப் பெற்றிருப்பதைக் கண்டேன் என்றாள்' ஆண்டாள் தோழியிடம்.
நாச்சியாா் திருமொழி பாடல் 02
நிச்சயதார்த்தம்
இரண்டாம் பாடல் : நிச்சயதார்த்தம்
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தனென்பானோர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழிநான்.
"நாளைக்கு முகூர்த்தம் என்று நிச்சயித்து சிங்கம் போன்ற கோவிந்தன் தென்னம் பாளையும் கமுகும் கட்டப்பட்ட பந்தலில் புகுவதைக் கனவில் காண்கிறேன்'.
நாச்சியாா் திருமொழி பாடல் 03
பெரியோர்களின் அனுமதி
மூன்றாம் பாடல் : பெரியோர்களின் அனுமதி
இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்தென்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக்கோடி யுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழிநான்.
"எம்பெருமானின் உறவினர்களான அனைத்து தேவர் கூட்டங்களும் எங்கள் திருமணத்துக்கு வந்துள்ளனர். நான் புதுப்புடைவை தரித்திருக்க எம்பெருமானின் தங்கையான பார்வதி (நாத்தனார்) நிச்சயதார்த்தப் புடைவையையும், அழகிய மாலையையும் எனக்குத் சூட்டிவிட்டாள்.'
நாச்சியாா் திருமொழி பாடல் 04
காப்பு கட்டுதல்
நான்காம் பாடல் : காப்பு கட்டுதல்
நாற்றிசைத் தீர்த்தங்கொண்ர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூம்புனை கண்ணிப் புனிதனோடடென்றன்னை
காப்பு நாண்கட்டக் கனாக்கண்டேன் தோழிநான்
"சிறந்த பிராமணப் பெரியோர்கள் புண்ய நதிகளிலிருந்து தீர்த்தங்கள் கொண்டுவந்து, நல்ல ஸ்வரத்துடன் அந்தணர்கள் வேத மந்திரங்கள் சொல்ல அவனுக்கும் எனக்கும் காப்புக் கட்டியதைக் கனவில் கண்டேன்'.
நாச்சியாா் திருமொழி பாடல் 05
பிடி சுற்றுதல்
ஐந்தாம் பாடல் : பிடி சுற்றுதல்
கதிரொளிதீபம் கலசமுடனேந்தி
சதிரிளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப்புகுதக் கனாக் கண்டேன் தோழிநான்
"அழகிய இளம் பெண்கள் நான்கு ஒளி வீசும் தீபங்களைக் கூடங்களுள் வைத்துக் கொண்டு மணப்பந்தலுக்கு எதிரே வரனை வரவேற்க நின்றிருந்தனர். அப்பொழுது வட மதுரை தலைவனான கண்ணன், கம்பீர நடையுடன் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்ததைப் பார்த்தேன்.'
நாச்சியாா் திருமொழி பாடல் 06
பாணிக்ரஹணம் (கை பற்றுதல்)
ஆறாம் பாடல் - பாணிக்ரஹணம் (கை பற்றுதல்)
மத்தள் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை
கைத்தலம் பற்றக் கனாகண்டேன் தோழிநான்
"கெட்டிமேளமும், சங்கும் ஒலிக்க, சிறந்த முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலின் கீழ் அந்த மதுசூதனன் என் கை பற்றினான் என்கிறாள்.'
நாச்சியாா் திருமொழி பாடல் 07
அக்னி வலம் வருதல்
ஏழாம் பாடல் - அக்னி வலம் வருதல்
வாய் நல்லார் நல்ல மறைமோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து
காயசின மாகளிறன்னான் கைப்பற்றி
தீவலம் செய்யக் கனாக் கண்டேன்தோழிநான்
"வேத விற்பன்னர்களான அறிஞர்கள் விவாஹ மந்திரங்களைத் தெளிவாக ஓத, அந்தந்த சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே பசுமையான தர்பங்களால் சூழப் பெற்ற அக்னியை எனது மணாளன் என் வலக்கையைப் பிடித்துக் கொண்டு வலம் வந்தான்.'
நாச்சியாா் திருமொழி பாடல் 08
அம்மி மிதித்தல்
எட்டாம் பாடல் - அம்மி மிதித்தல்
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழிநான்
இப்பிறவிக்கும் ஏழேழு பிறவிக்கும் நான் பற்றுக் கொண்டிருக்கும் நாராயணன். சிவந்த, மென்மை பொருந்திய தனது கையினால் எனது அடியை (காலை)ப் பிடிக்க நான் அம்மி மிதித்ததாகக் கனாக் கண்டேன் தோழி.
நாச்சியாா் திருமொழி பாடல் 09
பொரியிடுதல்
ஒன்பதாம் பாடல் - பொரியிடுதல்
வரிசிலை வாள் முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென் கை வைத்து
பொரி முகந்தட்டக் கனாக்கண்டேன் தோழிநான்
"அழகிய புருவம் உடையவர்களான எனது சகோதரர்கள், அக்னி வளர்த்து, என்னை அதன் முன் நிறுத்தி, சிங்கப் பிரானாகிய கண்ணனின் அழகிய கை மேல் என் கைகளை வைத்து நெற்பொரியிடச் செய்தனர்.'
நாச்சியாா் திருமொழி பாடல் 10
மங்கல நீர் தெளித்தல்
பத்தாம் பாடல் மங்கல நீர் தெளித்தல்:
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கலவீதி வலம் செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்றங்கானை மேல்
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழிநான்
"குங்குமம், குளிர்ந்த சந்தனக் குழம்பும் திருமேனியில் பூசி யானை மேல் ஏறி அழகிய வீதிகளில் நானும் அச்சுதனும் ஊர்வலம் கண்டு திருமஞ்சனமாட்டினர்' என்று தோழியிடம் சொல்லி மகிழ்கிறாள் ஆண்டாள்.
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லி புத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள் எம்பெருமானைத் தான் மணம் புரிவதாகச் சொல்லும் "வாரணமாயிரம்' எனத் தொடங்கும் இப்பத்துப் பாசுரங்களைச் சொல்பவர்கள் ஸகல சௌபாக்யங்களுடன் மணவாழ்க்கை அமையப் பெற்று சிறந்த பிள்ளைகளைப் பெற்று மகிழ்வர்.
ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்
Vaaranam aayiram paaraayanam| Vaaranamaayiram Pugazh
எம்பெருமான் சிலர் உறங்கும்போது தான் உறங்காமல் இருந்து அவர்களுக்கு ஸ்வப்னத்தில் ஆனந்தத்தைக் கொடுக்கும்படி இருக்கிறான் என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. அப்படியே ஆண்டாளும் அம்பெருமானுடனான திருக்கல்யாண வைபவத்தை எம்பெருமான் ஸ்வப்னத்தில் காட்டிக்கொடுக்க அதைத் தான் அனுபவைத்தபடியைத் தன் தோழிகளுக்குச் சொல்லித் கொள்கிறாள் ஆண்டாள்.
உங்கள் கருத்து : comment