மகா சிவராத்திரியில் நான்கு கால பூஜை முறைகளும், வழிபட‌ வேண்டிய‌ மூர்த்திகளும்.

மஹா சிவராத்திரி பூஜை நேரம், விரத நடைமுறைகளும் என்னென்ன? இரவு 11.30 முதல் 1 மணி வழிபாடு ஏன் முக்கியத்துவமானது!

சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.

மகா சிவராத்திரி விரதம்

மாதம்தோறும் வருகின்ற‌ சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விரதமிருந்து வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். எனவே தவறாமல் மகாசிவராத்திரி நாளில் நாம் வழிபாடுகள் செய்து பலன்பெறலாம்".

மகாசிவராத்திரி நன்னாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மாலை சிவபூஜை செய்வதற்கு முன்பாகவோ ஆலயம் சென்று தரிசனம் செய்வதற்கு முன்பாகவோ மீண்டும் நீராட வேண்டும். பின்பு இரவு முழுவதும் கண்விழித்து நான்கு கால பூஜைகள் செய்து அல்லது பூஜையில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிவராத்திரி முக்கியத்துவ‌ நேரம்

குறிப்பாக இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை சிவபெருமானை வழிபடுவது மிகமிக சிறப்பான காலமாக கூறப்படுகிறது. இதை பக்தர்கள் கடைப்பிடிக்கலாம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வழிபட கூடிய நேரமாகும். 'லிங்கோத்பவ காலம்' எனும் இந்த நேரத்தை தவற விடக்கூடாது.

முதல் கால‌ பூஜை : இரவு 10.00 மணி

மூர்த்தி சோமாஸ்கந்தர்
அபிஷேகம் பஞ்சகவ்யம்
அலங்காரம் வில்வம்
அர்ச்சனை தாமரை
நிவேதனம் பால் அன்னம்
பழம் வில்வம்
வஸ்திரம் சிவப்பு
சாத்தும் திரவியம் பச்சை கற்பூரம்
தூபம் சாம்பிராணி
தீபம் புஷ்ப‌ தீபம்

பதிகம் : சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

மழலைச் செல்வம் வேண்டுவோர் வணங்க வேண்டிய முதற்காலம்
மாலை 6.27 முதல் கால பூஜை தொடங்கும். இந்தக் காலத்தில் சிவபெருமானை ஶ்ரீசோமாஸ்கந்தராக வழிபட வேண்டும். 'ஸ + உமா + ஸ்கந்தர்' என்பதே இணைந்து சோமாஸ்கந்தராக மாறியது. அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இறைவன், இல்லறத்தானாக - இனிய கணவனாக - பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்தக் கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது ஒன்று. சச்சிதானந்தம் என்பதை சத்து - இறைவன்; சித்து - இறைவி; ஆனந்தம் - முருகன் எனலாம். இந்த மூன்று இயல்புகளின் அழகிய வடிவே சோமாஸ்கந்தம் என்று தத்துவ நூல்கள் விளக்குகின்றன.

இரண்டாம் கால‌ பூஜை : இரவு 12.00 மணி

மூர்த்தி தென்முகக் கடவுள்
அபிஷேகம் பஞ்சாமிர்தம்
அலங்காரம் குருந்தை
அர்ச்சனை மல்லிகை, முல்லை
நிவேதனம் பாயசம்
பழம் பலா
வஸ்திரம் மஞ்சள்
சாத்தும் திரவியம் அகில், சந்தனம்
தூபம் குங்கிலியம்
தீபம் நட்சத்திர‌ தீபம்

பதிகம் : கீர்த்தி திருஅகவல்

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்
கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.

கல்விச் செல்வம் அருளும் இரண்டாம் கால தட்சிணாமூர்த்தித் திருக்கோலம்
இரண்டாம் கால பூஜைகள் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை நடைபெறும். இந்த பூஜையில் நாம் ஈசனை ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது.

கல்வி, யோகக்கலை, இசை மற்றும் கலைகளைக் கற்பிக்கும் ஞானாசாரியத் திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தித் திருவடிவம். ‘தட்சிணம்’ என்பதற்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

மூன்றாம் கால‌ பூஜை : நள்ளிரவு 2.00 மணி

மூர்த்தி லிங்கோத்பவர்
அபிஷேகம் தேன்
அலங்காரம் கிளுவை, விளா
அர்ச்சனை வில்வம், சாதி மலர்
நிவேதனம் எள் அன்னம்
பழம் மாதுளம்
வஸ்திரம் வெண் பட்டு
சாத்தும் திரவியம் கஸ்தூரி சேர்ந்த‌ சந்தனம்
தூபம் தேவதாரு
தீபம் ஐந்து முக‌ தீபம்

பதிகம் : திருவண்டப்பகுதி

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரிய அதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க

ஶ்ரீலிங்கோத்பவர் மூன்றாம் கால பூஜை - இரவு 12.00
‘லிங்கம்’ என்றால் உருவம். ‘உற்பவம்’ என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, ‘உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்’ என்று பொருள். லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவபெருமான் திகழ... பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில், லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது. இறைவனின் இத்திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையின் போது நினைத்து வழிபட சகல செல்வங்களும் கிடைப்பதோடு இறைவனின் பரிபூரண ஆசியும் கிட்டும். ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

நான்காம் கால‌ பூஜை : அதிகாலை 4.00 மணி

மூர்த்தி ரிஷ்பாருடர்
அபிஷேகம் கருப்பஞ்சாறு
அலங்காரம் கருநொச்சி, ரோஜா
அர்ச்சனை நந்தியாவட்டை
நிவேதனம் வெண் சாதம்
பழம் நானாவிதப் பழங்கள்
வஸ்திரம் நீலம்
சாத்தும் திரவியம் புனுகு
தூபம் லவங்கம்
தீபம் மூன்று முக‌ தீபம்

பதிகம் : போற்றித் திருஅகவல்

ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!

ஸ்ரீரிஷபாரூடர் நான்காம் கால பூஜை - அதிகாலை 4.00
சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர். சிவபெருமான், தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராகத் திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களின் வரலாற்றின் மூலம் அறிய முடியும். ‘உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!’ என்று அஞ்சிய தரும தேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தஞ்சமடைய... சிவபெருமான் அதன் மீது ஏறிக் கொண்டு, அருள்புரிந்த நிலையே ரிஷப வாகனராகக் காட்சி கொடுத்தார். இந்தத் திருக்கோலத்தில் இறைவனை வழிபட்டுப் பூஜை செய்ய வேண்டியது நான்காம் காலம். நான்காம் கால பூஜையில் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தால் அவர்களுக்கு வேண்டும் சௌபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment