திருவெம்பாவை பாடல் 03: முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து மற்றும் திருப்பாவை பாடல் 03: ஓங்கி உலகளந்த உத்தமன் பாடல்களைப் பார்ப்போம்.

மார்கழி மூன்று. "வையத்து வாழ்வீர்காள்! நாமும்" என்கின்ற‌ திருப்பாவை மற்றும் "பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல்" என்கின்ற‌ திருவெம்பாவையின் இரண்டாம் பாடல்களைப் பார்ப்போம்

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -3

மார்கழி மூன்று. "முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்" என்கின்ற‌ திருவெம்பாவையின் மற்றும் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி" என்கின்ற‌ திருப்பாவை மூன்றாம் பாடல்களைப் பார்ப்போம்.

திருப்பாவை பாடல்கள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். மார்கழி மாதத்தில், இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் சேர்த்து பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் அனைத்தும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் முடிவடைகிறது.?

திருவெம்பாவை பாடல் - 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்:
முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

விளக்கம்:
ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.

திருப்பாவை பாடல் - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

விளக்கம்:
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்தான் திருவிக்கிரமன். அவனது நாமங்களைப் பாடி நாம் நோன்பு இருந்து நீராடி அவனை வழிபட்டால் பெரும் நீங்காத செல்வங்கள் எவை எவை ? நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கும். அவற்றின் ஊடாகத் தேங்கி நிற்கும் நீரில் கயல் மீன்கள் துள்ளி விளையாடும். தேன் நிறைந்த அழகிய குவளை பூக்களில் வண்டுகள் தேனைப் பருகுவதற்காக மயங்கி கிடக்கும்.

அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள்கூட தங்கள் கன்றுகளுக்கு ஊட்டியது போகக் கறப்பவர்களுக்கும் அவர்களுடைய குடங்கள் நிறையும்படி பால் அமுதைப் பொழியுமாம். கிருஷ்ண பக்தியானது இப்படியான வளங்களை நமக்குத் தரும். “நீங்காத செல்வம்” என்று குறிப்பிடுவது பொருளியல் சார்ந்த சுகபோகங்கள் மட்டுமல்ல, நிறைவானதும் அதற்க்கு மேல் எதுவுமே இல்லாததுமான பகவான் கோவிந்தனின் திருவடிகள் என்னும் செல்வத்தையே.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment