பாயிரம்
கந்த புராணம் பாயிரம் பாடல் வரிகள். விநாயகர் காப்பு. Kandha Puranamm Vinayakar Kaapu Lyrics
விநாயகர் காப்பு
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நூதலி னோடை
வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம்.
சுப்பிரமணியர் காப்பு
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.
நூற் பயன்
இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்
சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்
அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
ஆகத் திருவிருத்தம் - 5