சங்கடங்களைப் போக்கும் சங்கடஹர சதுர்த்தி : விரதம் மற்றும் வழிபாடு முறை

சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன? கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன் என்ன?

சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர் களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

விரதம் அனுஷ்டிக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.
முடிந்தவர்கள்,

'சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்!
பிரஸன்ன வதனம் தியாயேத்
ஸர்வவிக்ன உபசாந்தயே’

– எனக் கூறலாம்.

விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.

மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.
நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.

வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்:

சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை கடைபிடிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்,நோய்கள் குணமடையும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மேலும் சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

பூஜைக்கான நல்ல நேரம் குறித்த தகவல்

சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டு விரதம் கடைப்பிடித்தால் நன்மைகள் பல வந்து சேரும். இன்று சௌபாக்ய யோகம் காலை முதல் மதியம் 03:06 வரை இருக்கும். பின்னர் ஷோபன யோகம் தொடங்கும். சௌபாக்ய யோகத்தில் விநாயகப் பெருமானை வழிபடுவது மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.

இன்றைய‌ நாட்காட்டியின்படி, மகம் கிருஷ்ண சதுர்த்தி இன்று காலை 08:51 முதல் நாளை, ஜனவரி 22 காலை 09:14 வரை. ஜனவரி 21-ம் தேதி மகம் நட்சத்திரம் காலை 09:43 வரை. மகம் நட்சத்திரம் சுப காரியங்களுக்கு உகந்ததாக கருதப்படுவதில்லை, எனவே நீங்கள் காலை 09:43 மணிக்கு பிறகு கணபதியை வணங்க வேண்டும். அதன் பிறகு செய்யப்படும் வழிபாடு வேண்டுதல்களுக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விநாயகர் மந்திரம்

விநாயகப் பெருமானை வழிபடும் நேரத்தில், நீங்கள்
ஓம் கம் கணபதயே நம,
ஸ்ரீ கணேசா நம,
ஓம் வக்ரதுண்டாய நம,
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹ் பிரச்சோதயாத்

மற்றும்

ஓம் வக்ரதுண்ட மஹாகாய
சூரிய கோடி ஸம்ப்ரபாஹ்,
சர்வ கர்ஸ் கர்வே, நிர்விக் கர்வே.

மந்திரங்களைப் சொல்லிக் கொண்டே பூஜை செய்ய வேண்டும்.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment