பங்குனி உத்திர சிறப்பும், விரதமும், முருகன் வழிபாடும்

பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்று புராணங்கள் சொல்கின்றன.

மாதங்களில் 12வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகையினால் பங்குனி மாத உத்திரத்தின் சிறப்புகள் அதிகம்.

அற்புதமான பங்குனி மாதத்தை தெய்வ மாதம் என்றே போற்றுகின்றனர். பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்று புராணங்கள் சொல்கின்றன.

பங்குனி உத்திரம் விழா தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது முருகப் பெருமான், ஐயப்பன், சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு கொண்டாடப்பட்டாலும், இது முருகப் பெருமானோடு மிக நெருங்கியத் தொடா்பைக் கொண்டிருக்கிறது.

பங்குனி உத்திரம் 2022

பங்குனி உத்திரம் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒரு திருவிழா ஆகும் - இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மாா்ச் மாதம் 18 ஆம் நாள் வெள்ளி அன்று கொண்டாடப்படவிருக்கிறது. - இந்த விழா சிவபெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும் அா்பணிக்கப்பட்ட விழா ஆகும். - பங்குனி உத்திர நட்சத்திரம் மாா்ச் 18 அன்று அதிகாலை 12.34 மணிக்குத் தொடங்கி, மாா்ச் 19 அன்று அதிகாலை 12.18 மணியோடு முடிவடைகிறது.

தெய்வ‌ திருமணங்கள் நிகழ் மாதம்

ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் விவரிக்கின்றன. முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். அதேபோல், ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.

தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிற தேவேந்திரன் இந்திராணியைத் திருமணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான், அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.

பங்குனி உத்திர நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த திருமால், தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது விஷ்ணு புராணம். படைப்புக்கடவுளான பிரம்மா, தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது பங்குனி உத்திர நாளில்தான்! ஐயப்ப அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பங்குனி உத்திர வழிபாடு

பங்குனி உத்திர நாளில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பங்குனி உத்திர கொண்டாட்டம் பங்குனி உத்திரம் 'கல்யாண விரதம்' என்று அழைக்கப்படுகிறது. 8 வகையான மகா விரதங்களில் கல்யாண விரதமும் ஒன்று என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஆகவே இந்த நல்ல நாளில் திருமணம் ஆகாத இளையோா் விரதம் இருந்து தமக்கு நல்ல வரன்கள் கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானையும், பாா்வதி தேவியாரையும் வேண்டுவா். மேலும் தமக்கு மகிழ்ச்சியான மற்றும் இனிமையான இல்லற வாழ்க்கை வாழ்க்கை அமைய வேண்டும் என்று முருகப் பெருமானிடம் மனமுருக வேண்டுவா்.

தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுப்பது போல், பங்குனி உத்திரம் அன்றும் பக்தா்கள் காவடி தூக்கி, முருகப் பெருமானின் ஆலயங்களுக்குச் செல்வா்.

பங்குனி உத்திர விரதம்

1. பங்குனி உத்திரம் அன்று அதிகாலையில் துயில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும். அன்று முழுவதும் முருகனை நினைவில் கொள்ள‌ கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற திரு முருகனின் புகழ் சொல்லும் நூல்களை படிப்பது நல்லது.

2. அப்படி படிக்க முடியாதவர்கள் ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது ஆறுமுக‌ இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும். பங்குனி உத்திரம் நாள‌ன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல், நலம் பாதிக்கப்பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

3. நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம். அங்கு தீபமேற்றி முருகனை நினைத்து வழிபட வேண்டும்.

4. மேலும் வீட்டில் இருந்து கூட பூஜை செய்து தூப தீப ஆரதி காட்டி நைவேத்தியங்களை படைத்து சிறிய அளவில் பூஜையை முடிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று முருகனை வேண்டி ஏற்கும் விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும்.

5.48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்கள் கூறுகின்றன‌.

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment