திருவெம்பாவை பாடல்களும் விளக்கமும்
Thiruvempavai Lyrics Tamil with meaning, Sung by Manickavasagar at Thiruvannamalai
- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய். - பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். - முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய் - ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். - மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய் - மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். - அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். - கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பவாய். - முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். - பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். - மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். - ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். - பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். - காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். - ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். - முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். - செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். - அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். - உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். - போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
திருவெம்பாவை பதிகம் 01 | Thiruvempaavai Song 01
விளக்கம் :
திருவெம்பாவை பாடல் 01 விளக்கம் | Thiruvempaavai Song 01 Meaning / Porul / Vilakkam
ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?
மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது)
இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக. ((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)
திருவெம்பாவை பதிகம் 02 | Thiruvempaavai Song 02
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 02 விளக்கம் | Thiruvempaavai Song 02 Meaning / Porul / Vilakkam
சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?
திருவெம்பாவை பதிகம் 03 | Thiruvempaavai Song 03
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 03 விளக்கம் | Thiruvempaavai Song 03 Meaning / Porul / Vilakkam
முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்..
திருவெம்பாவை பதிகம் 04 | Thiruvempaavai Song 04
திருவெம்பாவை பாடல் 04 விளக்கம் | Thiruvempaavai Song 04 Meaning / Porul / Vilakkam
விளக்கம் :
ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளானவனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.
திருவெம்பாவை பதிகம் 05 | Thiruvempaavai Song 05
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 05 விளக்கம் | Thiruvempaavai Song 05 Meaning / Porul / Vilakkam
திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?
திருவெம்பாவை பதிகம் 06 | Thiruvempaavai Song 06
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 06 விளக்கம் | Thiruvempaavai Song 06 Meaning / Porul / Vilakkam
பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!
திருவெம்பாவை பதிகம் 07 | Thiruvempaavai Song 07
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 07 விளக்கம் | Thiruvempaavai Song 07 Meaning / Porul / Vilakkam
தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.
திருவெம்பாவை பதிகம் 08 | Thiruvempaavai Song 08
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 08 விளக்கம் | Thiruvempaavai Song 08 Meaning / Porul / Vilakkam
கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.
திருவெம்பாவை பதிகம் 09 | Thiruvempaavai Song 09
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 09 விளக்கம் | Thiruvempaavai Song 09 Meaning / Porul / Vilakkam
முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.
திருவெம்பாவை பதிகம் 10 | Thiruvempaavai Song 10
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 10 விளக்கம் | Thiruvempaavai Song 10 Meaning / Porul / Vilakkam
இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?.
திருவெம்பாவை பதிகம் 11 | Thiruvempaavai Song 11
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 11 விளக்கம் | Thiruvempaavai Song 11 Meaning / Porul / Vilakkam
நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.
திருவெம்பாவை பதிகம் 12 | Thiruvempaavai Song 12
விளக்கம் :
திருவெம்பாவை பாடல் 12 விளக்கம் | Thiruvempaavai Song 12 Meaning / Porul / Vilakkam
நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.
திருவெம்பாவை பதிகம் 13 | Thiruvempaavai Song 13
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 13 விளக்கம் | Thiruvempaavai Song 13 Meaning / Porul / Vilakkam
பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.
திருவெம்பாவை பதிகம் 14 | Thiruvempaavai Song 14
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 14 விளக்கம் | Thiruvempaavai Song 14 Meaning / Porul / Vilakkam
காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.
திருவெம்பாவை பதிகம் 15 | Thiruvempaavai Song 15
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 15 விளக்கம் | Thiruvempaavai Song 15 Meaning / Porul / Vilakkam
கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.
திருவெம்பாவை பதிகம் 16 | Thiruvempaavai Song 16
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 16 விளக்கம் | Thiruvempaavai Song 16 Meaning / Porul / Vilakkam
மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.
திருவெம்பாவை பதிகம் 17 | Thiruvempaavai Song 17
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 17 விளக்கம் | Thiruvempaavai Song 17 Meaning / Porul / Vilakkam
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.
திருவெம்பாவை பதிகம் 18 | Thiruvempaavai Song 18
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 18 விளக்கம் | Thiruvempaavai Song 18 Meaning / Porul / Vilakkam
தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.
திருவெம்பாவை பதிகம் 19 | Thiruvempaavai Song 19
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 19 விளக்கம் | Thiruvempaavai Song 19 Meaning / Porul / Vilakkam
எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?.
திருவெம்பாவை பதிகம் 20 | Thiruvempaavai Song 20
விளக்கம்
திருவெம்பாவை பாடல் 20 விளக்கம் | Thiruvempaavai Song 20 Meaning / Porul / Vilakkam
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.
உங்கள் கருத்து : comment