மா குரு தன ஜன யௌவன கர்வம்

செல்வம், செல்வாக்கு, இளமை - காலத்தின் முன் இவை என்ன ஆகும்? (பஜகோவிந்தம் 11) : மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் சுலோக‌ வரிகள். Maa kuru dhana jana yauvana garvam harati nimeshhaatkaalah sarvam - Bhaja Govindham Sloka 11 Lyrics - Tamil Lyrics

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்

மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா

பொருள்

செல்வம் எப்போதும் நிலைக்காதது. அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர். சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்; செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது. அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம். பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.

காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும். தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும். சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும். சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும். சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும். கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.

இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது. அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு

இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்

உங்கள் கருத்து : comment